போபால்: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் 6 மாதத்துக்குள் எம்.பி.யாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான சான்றிதழ் வழங்கப்பட்டது.