சென்னை
மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. ஏற்கனவே நடந்த இரு மெகா முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டன. நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் சுமார் 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மதியம் இரண்டே கால் மணிக்கே அந்த இலக்கை எட்டியது.
முகாம்களின் முடிவில் மொத்தம் 24,85,814 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் 14,90,814 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். மேலும் 9,95,000 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த முகாம்களில் மக்கள் திருவிழாவுக்கு வருவதைப் போல் மகிழ்வுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”தற்போது தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. எனவே மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் முறையாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் நிலை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.