திருப்பதி

திருப்பதி கோவிலில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான 2.80 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் 30 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட இலவச தரிசனம் மீண்டும் தொடங்கியது.  இதற்காகத் தினசரி 8000 டோக்கன்கள் திருப்பதியில் உள்ள சீனிவாசம் வளாகத்தில் வழங்கப்பட்டது.  இதை வாங்க ஏராளமான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடினர்.  இதையொட்டி கொரோனா அதிக அளவில் பரவலாம் என அச்சம் உண்டானது.

ஆகவே இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் அளிக்கத் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.    ஒரு நாளைக்கு 8 ஆயிரம் டோக்கன்கள் எனச் செப்டம்பர் மாத 5 நாட்களுக்கான 40 ஆயிரம் டோக்கன்களும் அக்டோபர் மாதத்துக்கான 2.4 லட்சம் டோக்கன்களும் நேற்று ஆன்லைனில் அளிக்கப்பட்டது.  இவ்வாறு இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நேற்று காலை 9 மணிக்கு டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கியது.   இதற்காக அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் சர்வர்கள் முடங்கலாம் எனக் கூறப்பட்டது.  ஆனால் தொழில்நுட்ப ஏற்பாடுகளைப் பிரபல கணினி நிறுவனங்களுடன் இணைந்து தேவஸ்தானம் செய்திருந்தது.   எனவே 30 நிமிடங்களில் பக்தர்கள் 2.80 லட்சம் இலவச தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து முடித்துள்ளனர்.