சென்னை: அழாத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தயாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உலக காது கேளாதோர் தினம், பெருக்க மரம் கல்வெட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களை தேடி அரசு வரும் காலம் வந்துவிட்டது என்றும் கூறினார்.
சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மிகப்பழமையான ஆணைபுலி பெருக்கமரம் என்றழைக்கப்படும் பெருக்க மரம் குறித்த கல்வெட்டு திறப்பு, மக்களை தேடி மருத்துவம் மையம் திறப்பு மற்றும் உலக காது கேளாதோர் வாரம் தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 10 முதல் 12 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத சென்னை மருத்துவ கல்லூரி அரங்கம் தற்போது முதலமைச்சர் வருகையால் 186 ஆண்டு கால பழமையான அரங்கம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான மரத்தின் குறிப்பேடு திறக்கப்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி, முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் பெருக்கமரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அதுபோல திமுக அரசு கொண்டு வந்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 10 ஆயிரத்து 916 பேர் பயனடைந்துள்ளனர். டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கோடி பேர் பயனடைவார்கள். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கான மையம் செயல்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து உரையாற்றி முதலமைச்சர் ஸ்டாலின், உலக காதுகேளாதோர் வாரம் செப் 20-26 வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஒருவாரம் மட்டும் இந்த மக்களை பார்க்கும் அரசு அல்ல…தொடர்ந்து மக்களை காக்கும் அரசு தான் திமுக அரசு என்றார். முதல்வரின் அறிவிப்புக்கு பலத்த கைத்தட்டல் எழுந்தது. தமிழகத்தில் விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டார்
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 1971 ஆம் ஆண்டு கலைஞர் பிறந்த நாளன்று, பிச்சைகாரர்கள் மறுவாழ்வு எனும் திட்டத்தை கொண்டு வந்தார். 1972 ஆண்டு தனது பிறந்த நாளில் கண்ணொளி திட்டத்தை கொண்டு வந்தார். எனது பிறந்த நாள் அன்று அண்ணா மேம்பாலம் அருகே உள்ள லிட்டில் லீலவர்ஸ் பள்ளியில் உள்ள காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடுவது வழக்கம். இது மகிழ்சியை அளிக்கும் என்றார்.
தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில், குடிசைக்களை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் கூறியவர், அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்றார்.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,35 572 பேருக்கு 108 கோடி செலவில் புதிய செவித்திறன் கருவி வழங்கப்பட்டுள்ளது என்ற அவர், மக்களை தேடி மருத்தும் திட்டம் தமிழக அரசுக்கு நல்ல பெயரை தேடி கொடுத்துள்ளது. 10 லட்சத்தை கடந்து மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். மேலும், மக்களை தேடி அரசு செல்லும் காலம் இது என்றார்.
அரசு மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளே புகழ்ந்து பேசும் அமைச்சராக மாசு திகழ்கிறார். அதேபோல, அழாத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயாக திமுக அரசு இருக்கும் என தெரிவித்தார்.
முன்னதாக, உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு, காது கேளாத முதியவர்கள் மற்றும் குழந்தைகள் 10 பேருக்கு உபகரணங்களை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு கட்டாயமாக வழங்கும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
தொடர்ந்து, தமிழகத்தில் முதல்முறையாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மையத்தை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறந்து வைத்த முதலமைச்சர்,
ஆனைப்புளி பெருக்க மரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழகத்தில் விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.