மும்பை

ன்று மும்பை பங்குச் சந்தையில் புதிய உச்சமாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தைகள் நன்கு முன்னேறி புதிய உச்சங்களைத் தொடுகிறது.   நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமிருந்த நிலையிலும், இந்தியப் பங்குச் சந்தைகள் பாதிக்கப்படாமல், உச்சம் தொட்டபடி இருந்தன. தொடர்ந்து சென்செக்ஸ் 50 ஆயிரம், 55 ஆயிரம், 58 ஆயிரம் என தொடர்ந்து உயர்வைக் கண்டு வந்தது.

அவ்வகையில், நேற்றைய வர்த்தகத்தின் இடையே, 59 ஆயிரத்து 957 புள்ளிகளை எட்டியது  பிறகு வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 59 ஆயிரத்து, 885 புள்ளிகளுடன் புதிய உச்சத்தில் நிலை பெற்றது.  அதைப் போல் தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’யும், 17 ஆயிரத்து 823 புள்ளிகளில் நிலைபெற்றது.  எனவே  இன்றைய வர்த்தகத்தில் நிச்சயம் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என முதலீட்டாளர்கள் காத்திருந்தனர்.

அதன்படியே இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் சென்செக்ஸ் 325.71 புள்ளிகள் உயர்ந்து 60,211.07ஆகவும், நிப்டி 93.30 புள்ளிகள் உயர்ந்து 17,916.30 எனும் புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தியாவில்  பண்டிகை காலம் என்பதால் இப்போதே பல வர்த்தகங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளன.

எனவே பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரைத் தீபாவளி கொண்டாட்டம் இப்போதே துவங்கி விட்டது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.