டில்லி

பாஜகவை உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அக்டோபர் 2 முதல் பிரதிக்யா யாத்திரையை தொடங்குகிறார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.  இங்கு ஆளும் பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் கட்சி வியூகங்களை வகுத்து வருகிறது.  ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியதால் காங்கிரஸ் கட்சிக்கு, பல்வேறு தரப்பிலும் ஆதரவு வலுத்துள்ளது.  இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.

அவர் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட் மற்றும் ஆக்ரா, கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி, அசாம்கர், பிரயாக்ராஜ், தியோரியா ஆகிய ஆறு இடங்களில் பேரணி நடத்துகிறார். அதை தொடர்ந்து கோரக்பூரில் இருந்து முதல்வர் அலுவலகம் நோக்கி நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார். பேரணி நடக்கும் தேதி மற்றும் இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.  இருப்பினும் கட்சி நிர்வாகிகள் அதற்கான வேலைகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

வரும் வாரம் பிரியங்கா காந்தி லக்னோ வருவதால், பேரணி நடத்துதல், பிரதிக்யா யாத்திரை திட்டம் குறித்து இறுதி திட்டங்கள் வகுக்கப்படும் என்று, உத்தரப் பிரதேச காங்கிரஸ் குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.  மேலும்,நிர்வாகிகள், ‘உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ‘ஹம் வச்சன் நிபாயேங்கே’(நாம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்)  என்ற கோஷத்துடன் ‘காங்கிரஸ் பிரதிக்யா யாத்திரை’ மேற்கொள்ளப்படும்.

இந்த யாத்திரை 12,000 கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்படும். இது அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக செல்லும். பிரதிக்யா யாத்திரையின் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை;  வரும் அக்டோபர் 2ம் தேதி (காந்தி ஜெயந்தி) யாத்திரை தொடங்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]