அகமதாபாத்
பாகிஸ்தானுக்குச் சீன கப்பலில் குஜராத் வழியாக ஆயுதம் கடத்திய வழக்கு தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு ஒரு சரக்கு கப்பல் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் சென்றுகொண்டு இருந்தது. குஜராத் மாநில காண்ட்லா துறைமுக அதிகாரிகள் சந்தேகத்தில் அந்த கப்பலை மடக்கி சோதனை செய்தனர். அந்த கப்பல் மாலுமிகள் சாய ஆலை உபகரணங்கள் கொண்டு செல்வதாக தெரிவித்தனர். சொதனையில் கப்பலில் ஏவுகணை தயாரிக்கும் உபகரணங்கள் இருந்ததால் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) உதவி விசாரணையில் கோரப்பட்டது. கப்பலில் இருந்த உபகரணங்கள் ஏவுகணை தயாரிப்பதற்கான ஆயுதங்கள் என்பது டிஆர்டிஓ நிபுணர்களின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இது தேச பாதுகாப்பு தொடர்பான வழக்கு என்பதால் தற்போது தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப் பட்டுள்ளது. இதுகுறித்து என் ஐ ஏ வின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாங்கள் மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி சீன கப்பல் வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் வழக்கில் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.