சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி கூறினார்.
தமிழக ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது பற்றியும் , கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பள்ளி மாணவர்களுக்கு கற்றலை போதிப்பு, கற்றல் திறனை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் 180க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள், கல்வி பணியாளர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இயற்பியல் படித்த ஆசிரியர்கள் உயிரியல் உள்ளிட்ட வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை உள்ளது என நடைமுறைப் பிரச்னைகள் குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். ஆசிரியர்கள் மட்டுமல்லாது கல்வி பணியாளர்கள் தங்களது பிரச்னைகளை எடுத்துரைத்தனர். ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய முடிவு உடனடியாக எடுக்கப்படும்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். பணி உயர்வு தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆண்டுக்கு மூன்று முறை குறைதீர் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் நடத்தப்பட வேண்டும், ஆனால் இதுவரை அது நடத்தப்படாமல் உள்ளது. கல்வித்துறை சார்ந்த சிறிய அளவிலான பிரச்னைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சரிப்படுத்த வேண்டும். நிதி செலவு ஏற்படும் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். ஆசிரியர் சங்கங்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை அறிக்கையாக தயார் செய்து முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட அளவில் ஏற்படும் பிரச்சனைகளை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.