வார இறுதி நாட்களிலும், பண்டிகையுடன் கூடிய நீண்ட விடுமுறை நாட்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த உலகின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுபோக்கு மையங்கள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன.
ஐ.டி. நிறுவன வேலைவாய்ப்பு பெருகியதை அடுத்து புற்றீசல் போல் பெருகிய சுற்றுலாத் தொழில் சார்ந்த நிறுவனங்கள், கொரோனா கட்டுப்பாட்டிற்குப் பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலையிழந்து காணப்படுகிறது.
பெங்களூரு நகரின் ஒயிட் பீல்ட் பகுதியில் இருந்து வெளியேறும் ஐ.டி. நிறுவன ஊழியர்களால் வெள்ளிக்கிழமை மாலை நேரம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஏதும் தற்போது இல்லை.
ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து பணிபுரியும் நிலையில், நிறுவனங்களும் அங்குள்ள ஐ.டி. பார்க்குகளை காலி செய்துவிட்டு சிறிய அப்பார்ட்மெண்டுகளுக்கு சென்று விட்டன, அதனால் தங்கள் ஊழியர்களை உடனடியாக மீண்டும் அலுவலகம் அலுவலகம் அழைக்க முடியாத நிலையில் உள்ளன.
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களும் கொரோனா கட்டுப்பாடுகளால் வெளியில் செல்ல முடியாமல் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இவர்களின் வரவுக்காக காத்திருந்த உணவகங்கள், தங்கும் விடுதிகள், டிராவல்ஸ் நிறுவனங்கள் என்று துறை சார்ந்த பல்வேறு தொழில்கள் மற்றும் ஊழியர்கள் நிலையான வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
பிரபல உணவகங்களின் கிளைகள் பலவும் மூடப்பட்டுள்ளதோடு, சிறு சிறு சிற்றுண்டி சாலைகளும் மூடப்பட்டு விட்டன.
தங்கும் விடுதிகள் பலவும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசு வழிகாட்டுதலுக்கு இணங்க கொரோனா நோயாளிகள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் இடங்களாக இருந்ததால், நகருக்கு வரும் சொற்ப எண்ணிக்கையிலான பயணிகளும் இதுபோன்ற விடுதிகளில் தங்குவதற்குத் தயங்கும் வகையில் உள்ளது.
தொழில் போட்டி காரணமாக பயண ஏற்பாட்டாளர்களின் பேச்சுக்கள் இவர்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக உள்ளதால், தங்கும் விடுதிகள் மீண்டும் முன்பு போல் உற்சாகமாக செயல்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தங்கும் விடுதிகள் போன்றே ஊர்திகளும் நோயாளிகள் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்ற அச்சமும் சேர்ந்துகொள்வதால், விதிமுறைகளைப் பின்பற்றி தொழில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணங்களுக்காக பயணம் செய்பவர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது என்றே சொல்லவேண்டும்.
இது பெங்களூரில் மட்டுமல்ல, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மற்றும் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய சுற்றுலா மையங்கள் மற்றும் ஐரோப்பிய அமெரிக்க மற்றும் அரபு நாடுகளிலும் சுற்றுலாத் துறையின் நிலை இதுபோலவே உள்ளது.
சுற்றுலாத் தொழில் சார்ந்த வருமானம் ஈட்டிய ஆட்டோ, டாக்சி, கலை பொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீங்கி, உலகம் முன்பு போல் எப்போது சுகம் பெறும் என்ற கேள்வியோடும் கனவுகளோடும் காத்திருக்கின்றனர்.