சென்னை:
தமிழக ஆளுநராக ரவி நியமனம் செய்ததின் நோக்கம் என்ன? என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகள் (என்டிஏ அல்லாத கட்சிகள்) ஆளும் மாநிலங்களில், ஆளும் மாநில அரசுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் ஆளுநர்களை மத்திய அரசு நியமித்து வருகிறது. உதாரணமாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, புதுச்சேரியின் லெப். ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, அப்போதைய காங்கிரஸ் அரசுக்குப் பல தடைகளை உருவாக்கினார். இதனால் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. பெரும் எதிர்ப்புக்குப் பிறகு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது என்று தெரிவித்த அவர், திமுக அரசு வெளிப்படையான முறையில் செயல்படுகிறது. மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக மோடி அரசு ரவியை நியமித்ததா என்பது எனது முக்கிய சந்தேகம், ”என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை, பாஜகவை நிராகரித்த மாநில மக்களை அச்சுறுத்துவதாக உள்ளது என்றும் அழகிரி குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியைப் போலத் தமிழக அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
புகழ்பெற்ற கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்களை ஆளுநர்களாக நியமிப்பது ஒரு நல்ல நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ரவியை நியமிப்பதன் மூலம், மோடி அரசு நடைமுறைக்கு எதிராகச் சென்றுள்ளது. அவர்கள் ஜனநாயகத்தை அழிக்க முயன்றால், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் மக்களைத் திரட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.