கணிணிப் பூக்கள் 3

நான் மனிதன்

பா. தேவிமயில்குமார்

நீண்டு கொண்டே போகிறது
நமக்கான காலங்கள்,
யார் இருந்தாலும்,
இல்லாமற் போனாலும் !

தேய்ந்து வருகிறது
தினமும் நினைவுகள்
எப்படி இறுக்கிப் பிடித்து
எடுத்து வைத்திருந்தாலும் !

செலவுகளைப் போல
சிந்தனைகள் செல்வத்தின் மீது
வளர்ந்து கொண்டே…
வேண்டாமென்றாலும் கூட !

விரிந்த வானத்தின்
ஒரு நூறு நட்சத்திரங்களை
அள்ளிக் கொள்வதைப்போல
ஆசை…. முடியாவிட்டாலும் !

எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும்
எல்லையில்லா பிரபஞ்சமாய்
ஏதோ ஒன்று நிறைவேற
அமைதி ஆகிறது மனம் அக்கணம் !

படியில் அளந்திடும் படியான
பயணமே வாழ்க்கை
ஆனாலும் ஆசைகள்
ஏணிப்படிகளாய் எட்டாத உயரத்திற்கு !

போதுமென சிந்தித்தாலும்
போதாதென நூறு தலைமுறைக்கு
பதுக்கி வைக்கும் போதுதான்
பாழும் மனம் தன் கோரமுகத்தை

நீட்டிக் காண்பிக்கிறது !
நான் மனிதன் என்று !