போதை பொருள் விவகாரத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நேரில் ஆஜராகும்படி ஹைதராபாத் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
கடந்த 3-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் 10 மணி நேரமும், நடிகை சார்மி கவுரிடம் 8 மணி நேரமும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் 6 மணி நேரமும் , நடிகர் நந்துவிடம் 4 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாகுபலி புகழ் நடிகர் ராணா, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆஜரானார்.
அவரிடம் வங்கி கணக்கு விவரங்கள், பண பட்டுவாடா, எஃப்கிளப்புக்கு செல்வது, கெல்வினுடன் உள்ள நெருக்கம் போன்றவிவரங்கள் கேட்டறியப்பட்டுள்ளன.
கடந்த 2017-ல்நடைபெற்ற போதை பொருள் விற்பனை குறித்த விசாரணையில் ராணாவின் பெயர் இல்லை. தற்போது நடிகர் ராணாவும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.