டெல்லி: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் உள்பட 6 இடங்களுக்கு அக்டோபர் 4ந்தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் ஒரு மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மீதமுள்ள 2 இடங்கள் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 6 இடங்களுக்கு தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்குவங்கம், அசாம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில்தலா ஒரு இடத்துக்கும், தமிழ்நாட்டில் 2 இடங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் தொடர்பாக செப்டம்பர் 15ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22ந்தேதி
வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23ந்தேதி நடைபெறுகிறது
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 27ந்தேதி.
வாக்குப்பதிவு அக்டோபர் 4ந்தேதி. காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 5ந்தேதி 5மணிக்கு தொடங்கி இரவே முடிவு வெளியிடப்படும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், அதிமுக எம்.பி.யாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், அவர்கள் தங்களது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காலியாக உள்ள அந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு இடங்களையும் திமுக கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.