சிம்லா: இந்தியாவிலேயே  18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குறைந்தது ஒரு கொரோனா தடுப்பூசி போட்டுள்ள மாநிலம் என்ற இலக்கை இமாச்சலப் பிரதேசம் எட்டியுள்ளது. அதையொட்டி, ஹிமாச்சல் வளர்ந்த சாம்பியன் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை 68,75,41,762 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (செப்டம்பர்  5ந்தேதி)  மட்டும் 25,23,089 பேருக்கு தடுப்பூசி செலுததப்பட்டு  உள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  இமாச்சலப் பிரதேச மக்கள்தொகையில், 18வயதுக்கு மேற்பட்டோருக்கு  100 சதவிகிதம் முதல் டோஸ் போடப்பட்டுள்ள தெரிய வந்துள்ளது. மேலும், மாநிலத்தின் , மூன்றில் ஒரு பங்கு மக்கள் இரண்டாவது டோஸுடனும் தடுப்பூசி போட்ட முதல் மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதையொட்டி, அம்மாநில  மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது,  “இமாச்சல பிரதேசம் எனக்கு பெருமைப்படுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. ஒரு நேரத்தில், அடிப்படை வசதிகளுக்காக போராடும் மாநிலமாகத்தான் இமாச்சலை நான் பார்த்தேன், ஆனால் இன்று அவர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்க்கிறோம். இங்குள்ள அரசு மற்றும் குழுக்களுக்கு நான் வாழ்த்தி நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார்.

மேலும், இமாச்சல பிரதேசம் மலைப்பாங்கான மாநிலமாக இருப்பதால், தளவாடங்கள், போக்குவரத்து மற்றும் தடுப்பூசி சேமிப்பகத்தில் இமாச்சலம் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தாலும்  ஆனால் நிலைமையை சரிசெய்து, தடுப்பூசிகளை முழுமையாக கையாண்டு, பாராட்டத்தக்க வகையில் மாநிலஅரசு செயல்பட்டது என்றும், அதற்காக இமாச்ச லபிரதேச அரசையும் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரையும் பாராட்டுவதாக தெரிவித்தார்.

ஹிமாச்சலைத் தவிர சிக்கிம் மற்றும் தத்ரா நகர் ஹவேலியும் அதன் தகுதிவாய்ந்த மக்களுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டு, கோவிட் -19 க்கு எதிராக முதல் டோஸை அளித்து, மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், பல மாநிலங்கள் அதை அடைய நெருங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நவம்பர் இறுதிக்குள் 2தவணை தடுப்பூசிகளையும் செலுத்த இமாச்சல் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.