சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73% சொத்து சேர்த்துள்ளார் என 3வது நீதிபதி விசாரணையின்போது, லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.
அதிமுக ஆட்சியில் சர்ச்சைக்குரிய அமைச்சராக இருந்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் பால்வளத்துறையின் அமைச்சராக இருந்து வந்தார். இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குதொடர்ந்தார். அவரது மனுவில், வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தீர்ப்பின்போது மாறுப்பட்ட கருத்தை தெரிவித்தனர். இதனால் வழக்கு 3வது நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கின் இன்றைய விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73% சொத்து சேர்த்ததாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாக சொத்து சேர்த்து இருப்பதாக கூறப்பட்டதால் வழக்கை கைவிட முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், 73 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்திருப்பதால் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.