சென்னை: புதிய வாகனங்களுக்கு  பம்பர் டூ பம்பர் 5ஆண்டு காப்பீடு குறித்த தனிநீதிபதியின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுதொடர்பாக உடனே   சுற்றறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளது.

சாலை விபத்து மரணத்தில் இழப்பீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வைத்தியநாதன், செப்டம்பர் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில், வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை ஏற்று, தமிழகஅரசும், அதற்கான சுற்றறிக்கை வெளியிட்டது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து,  பொதுக்காப்பீட்டு மன்றம் (GIC) சார்பில்மெமோ ஒன்று நீதிபதி வைத்தியநாதனிடம்  தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நீதிபதியின் உத்தரவை, இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) ஒப்புதல் இல்லாமல்  செயல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும்,   ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டுமெனக் கேட்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்ற நீதிபதி, பொதுக் காப்பீட்டு மன்றம், காப்பீடு ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை இணை ஆணையர் ஆகியோரை வழக்கில் சேர்த்ததுடன், வழக்கில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், செப்டம்பர் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான கட்டாய வாகன காப்பீடு உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

கட்டாயக் காப்பீடு உத்தரவை ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறப்பித்தவுடன், துரித கதியில் செயல்பட்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசை நீதிபதி வைத்தியநாதன் தனது உத்தரவில் பாராட்டியுள்ளார்.