சென்னை: பொறியியல் படிப்பிற்ககான கலந்தாய்வு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது; தரவரிசை பட்டியல் 14-ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூலை மாதம் 26ந்தேதி தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக நடைபெற்ற விண்ணப்பப் பதிவு, ஆகஸ்டு 24-ம் தேதி நிறைவடைந்தது. பொறியியல் படிப்புக்கு 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 26ந்தேதி கலந்தாய்வுக்கான ரேண்டம் வெளியானது.
இந்த நிலையில், தற்போது பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வு தேதியில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, செப்டம்பர் 4ம் தேதி வெளியிடப்பட இருந்த பொறியியல் மாணவ – மாணவிகளுக்காக தரவரிசை பட்டியல் செப்டம்பர் 14ம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வி துறை அறிவித்திருந்தது.
தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலான கலந்தாய்வு, செப்டம்பர் 17ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது. அதே தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வும் நடைபெறும் என்று கூறியுள்ளது.
தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரையிலும்,
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும், துணை கலந்தாய்வு அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.