சென்னை: தமிழ்நாட்டில் வழக்கிழந்த 89 சட்டங்களை நீக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியகோரிக்கைவிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த நிலையில், அமைச்சர் எஸ்.ரகுபதி. சட்ட முன்வடிவை சட்ட தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதில்,  தமிழ்நாடு மாநில சட்ட ஆணையமானது, பல்வேறு இயற்றுச்சட்டங்கள் மிகவும் பழமையானதாக மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கும் சட்டங்களை நீக்குவதற்கு பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின்சட்டமியற்றும் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் ஆகியவை 1858-ம் ஆண்டு தமிழ்நாடுகட்டாய தொழிலாளர் சட்டத்தை நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளது.

மாநில சட்ட ஆணையம் மற்றும் மத்திய அரசின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயுள்ள சட்டங்களை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி,  கடந்த 1858 – தமிழ்நாடு கட்டாய தொழிலாளர் சட்டம், 1866 – தமிழ்நாடு கால்நடை நோய் சட்டம், 1976 – தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி சட்டம் மற்றும் வேளாண் விளைபொருள் சந்தை திருத்த சட்டம், பந்தைய வரி, மாநகர காவல், பொது விற்பனை வரி உள்ளிட்ட 89 சட்டம் மற்றும் திருத்தச் சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட முன்வடிவு, பேரவைக் கூட்டத்தின் இறுதி நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.