கோவை: விநாயக சதுர்த்திக்கு எதிராக, அன்றைய தினம் கிறிஸ்தவர்கள்  ஜெபயாத்திரை  நடத்துவோம் என அறிவித்த செயின்ட் பால்ஸ் கல்லூரி நிர்வாகியும், பாதிரியாருமான  டேவிட் கைது செய்யப்பட்டார். மத மோதல்களை தூண்டும் வகையில் அவரது அறிவிப்பு இருந்ததாக எழுந்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கன்னியாகுமரியில் இந்துமதம் மற்றும் பிரதமரை இழிவு படுத்திய பகிரங்கமாக பேசிய பாதிரியார்  ஜார்ஜ் பொன்னையா, கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையான நிலையில், தற்போது கோவையைச் சேர்ந்த பாதிரியார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தடாகம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் பால்ஸ் மகளிர் கலைக்கல்லூரி. இந்த கல்லூரியின் முதல்வராக இருப்பவர் பாதிரியார் டேவிட். இவர், விநாயகர் சதுர்த்தியன்று ஜெபயாத்திரை நடத்துவதாக அறிவித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. பாதிரியார்  டேவிட்,  தனது லெட்டர் பேடில்  “செப்டம்பர் 10ம் தேதி இந்துக்கள் விநாயக சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். அதே தினத்தில் மத ஜெப யாத்திரை என்ற பெயரில் நாமும் யாத்திரை நடத்துவோம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே யாத்திரை  நடத்தியதால் தான் விநாயகர் சதுர்த்தி தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த முறையும் எப்படியாவது ஜெபயாத்திரை  நடத்துவோம் என்று  குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலை வைக்க தமிழகஅரசு தடை வைத்துள்ள நிலையில், பாதிரியாரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இந்துமுன்னணியைச் சேர்ந்தவர்கள், காவல்துறையில் புகார் கொடுத்தனர். புகாரில்,  பேரில், துடியலூர் போலீசார் பாதிரியார் டேவிட்டை இன்று காலை 5 மணிக்கு கைது செய்துள்ளனர்.

மேலும் 11 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிரியாரின் அறிவிப்பு கோவை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.