டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஸ் கத்தூனியா 2வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
2020ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் உலகின் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளனர்.
போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா அசத்தலாக வீசி 2வது இடத்தை பிடித்தார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
24வயதான யோகேஷ் கத்துனியா பி.காம் பட்டதாரி. இவர் பங்குபெற்ற முதல் பாராலிம்பிக் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இந்தியாவின் பதக்கம் 5 ஆக உயர்ந்துள்ளது, அதாவது ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.