டில்லி

ற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பில் நிதானம் காட்டுமாறு மத்திய மாநில அரசுகளை எய்ம்ஸ் பேராசிரியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.   இடையில் சில இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டன.  தற்போது கொரோனா பரவல் குறைந்து காணப்படுவதால் பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இன்னும் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.  தவிரப் போக்குவரத்து, வகுப்புகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் சிக்கல்கள் உள்ளன.

மேலும் மாணவர்கள் அறைக்குள் இருக்கும் சூழலில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது  மேலும் அடுத்த 2 மாதங்களில் பண்டிகைக்காலம் வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாறாகக் கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 56 பேர் பள்ளிகளை விரைவில் திறக்குமாறு பிரதமர் மோடிக்கும் மாநில முதுவர்களுக்கும் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்காத 4-5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், ”மாணவர்களுக்கு பள்ளிகளால் கொரோனா பரவும் என்ற அச்சம் தேவையற்றது.  குறிப்பாகச்  சிறாருக்குத் தொற்று அபாயம் மிகவும் குறைவு.  ஆகவே முதலில் ஆரம்பப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.