மும்பை

பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் நிறுவன பொருட்களைத் தயாரித்து வர்த்தகம் செய ரிலையன்ஸ் நிறுவனம் அனுமதி வாங்கி மின் பொருட்கள் தயாரிப்பிலும் தடம் பதிக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையைச் செய்து வருகிறது.   இதில் மளிகை பொருட்கள், மின்னணு விற்பனை, தொலைத் தொடர்பு, பெட்ரோலியம் பொருட்கள் எனப் பல பொருட்களும் அடங்கும்.   இதில் மற்றொரு பிரிவிலும் ரிலையன்ஸ் நிறுவனம் களம் இறங்க உள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மின் பொருட்கள் நிறுவனமான பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் ஆகிய நிறுவனங்களின் பொருட்களை உற்பத்தி செய்து வர்த்தகம் செய்ய ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.  அதன்படி இனி மின்சார பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதித்துள்ளது.

ஏற்கனவே கெல்வினேட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ரிலையன்ஸ் தற்போது பிபிஎல் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்ய உள்ளது.  இந்த இரு நிறுவனங்களின் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டெலிவிஷன், மின் விசிறிகள், மின்சார பல்புகள் போன்ற அனைத்தையும் இனி ரிலையன்ஸ் உற்பத்தி செய்து தங்களின் கடைகள் மற்றும்  இணைய தளங்களின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.

இதைத் தவிர மற்ற கடைகளிலும் இதே பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த விற்பனையை வரும் விழாக்காலத்துக்கு முன்பு தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.