டில்லி
அரசு 70 ஆண்டுகளாக உருவாக்கிய சொத்துக்களை பாஜக தனியாருக்கு விற்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட அரசு சொத்துக்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான அரசுச் சொத்துக்களை மத்திய அரசு விற்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரயில்வே, மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சொத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக 15 ரயில் நிலையங்கள், 160 நிலக்கரி சுரங்கங்கள், 25 விமான நிலையங்கள் உள்ளிட்டவை விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 6 விமான நிலையங்கள், தூத்துக்குடி துறைமுகம்,, நீலகிரி மலை ரயில் உள்ளிட்டவை தனியாருக்குக் குத்தகைக்கு விட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி, “கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் எவ்வித சொத்துக்களும் உருவாக்கப்படவில்லை என பாஜக கூறி வருகிறது. அதே வேளையில் கடந்த 70 ஆண்டுகளில் அரசு உருவாக்கிய அனைத்துச் சொத்துக்களையும் பாஜக அரசு விற்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு தவறாகக் கையாள்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கட்டமைத்த அனைத்தையும் பாஜக அரசு அழித்து விட்டது தற்போது இறுதி நடவடிக்கையாக அனைத்து அரசு சொத்துக்களையும் விற்று வருகிறது. இதை நாட்டுப் பற்று கொண்ட ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டும்.
ஏற்கனவே நான் கொரோனா குறித்து எச்சரிக்கை செய்தேன். அப்போது அனைவரும் என்னைக் கேலி செய்தனர். ஆனால் நான் சொன்னபடியே நடந்தது. நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்வது குறித்து இன்று எச்சரிக்கிறேன். இதனால் நாட்டில் இளைஞர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. மாறாக 2 அல்லது மூன்று பெரிய முதலாளிகள் மட்டுமே பயனடைவார்கள்” என தெரிவித்துள்ளார்..