சென்னை

சென்னை மற்றும் பெங்களூருவில் இரட்டை இலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் வீடுகளில் 16 கார்கள், பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார்.  அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்புன் இருப்பதாகக் கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரை இவர் ஏமாற்றி பண மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டிருந்தபோது, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி டெல்லி குற்றவியல் காவல்துறை டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையிலேயே உள்ளார்.    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் ஒரு மோசடி பேர்வழி என்றும் கூறப்பட்டது.

மேலும் இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற பல மோசடி நிகழ்வுகளில் ஈடுபட்டு சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையொட்டி டெல்லி அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து பெங்களூருவில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  இதில் சென்னையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் பங்களாவில் 16 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் நடிகர்கள் பயன்படுத்தும் சொகுசு கேரவானும் அங்கே இருந்தது.

விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை நேற்று முடிவுக்கு வந்தது.   இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த பங்களாவுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.