காதலியின் வித்தியாசமான அன்பை வெளிப்படுத்தும் முயற்சி, இளைஞருக்கு ரூ.5,500 அபராதத்தை வாங்கிக் கொடுத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த இளைஞர் ஆதித்யா சிகர்வார் தனது காரில் காதலியின் அன்பை வித்தியாசமாகப் பதிவு செய்ய நினைத்துள்ளார். இதற்காக அவரது காதலி, காரின் முன்பக்கம் முதல் பின்பக்கம் வரை லிப்ஸ்டிக் மூலம் சுமார் 3,400 முத்தக் குறிகளை பதித்துள்ளார்.

காதல் கார் ரெடியானதும், அதை நகரின் சாலைகளில் இரண்டு நாட்களாக ஆதித்யா ஓட்டிச் சென்றுள்ளார். காரைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்ட நிலையில், அதன் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
ஆனால், சமூக வலைதளங்களில் கிடைத்த லைக்குகளும் ஷேர்களும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வைரலான புகைப்படத்தைப் பார்த்த போக்குவரத்து போலீஸார் காரைக் கண்டுபிடித்து நிறுத்தினர்.
பின்னர் காரை பறிமுதல் செய்த போலீஸார், ரூ.5,500 அபராதம் விதித்தனர். அதுமட்டுமின்றி, காரில் இருந்த ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்தக் குறிகளையும் உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, காதலியின் 3,400 முத்தங்களும் கார் வாஷ் மூலம் ‘காணாமல் போயின’.
சமூக வலைதளங்களில் பிரபலமாகும் வித்தியாசமான டிரெண்டுகளை அப்படியே பின்பற்றுவதற்கு முன்பு, பொதுச் சாலைகளில் அது விதிமுறைகளை மீறுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டியுள்ளது.