பெங்களூரு: 
பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஏழு சொகுசு கார்களை கர்நாடக போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது.
பெங்களூருவில் உயர்மட்ட யுபி சிட்டி பகுதிக்கு அருகில், வரி செலுத்தாத அல்லது முறையான ஆவணங்கள் மற்றும் காப்பீடு இல்லாத கார்களை கண்டுபிடிக்கச் சோதனை செய்த போக்குவரத்துத் துறையினர் இந்த கார்களை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸைப் பொறுத்தவரை, மெகாஸ்டாரிடமிருந்து சொகுசு காரை வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் பாபு, வாகனத்தின் பதிவை அவரது பெயருக்கு மாற்றவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய எஸ்டேட் நிறுவனர் பாபு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம்  ரூ .6 கோடி கொடுத்து இந்த ரோல்ஸ் ராய்ஸை நான் நேரடியாக வாங்கியுள்ளேன். 2019 ல் நடிகருக்கு சொந்தமானது என்பதால் பழையதாக இருந்தாலும் வாகனத்தை வாங்கினேன். பதிவுக்காகப் பெயர் மாற்றத்திற்கு நான் விண்ணப்பித்துள்ளேன். என்று கூறினார்.
இதுகுறித்து பேசிய போக்குவரத்துத் துறை கூடுதல் ஆணையர் நரேந்திர ஹோல்கர், உரிய ஆவணங்கள் இல்லாததால் ரோல்ஸ் ராய்ஸ் கார் பறிமுதல் செய்யப்பட்டதாகத்  தெரிவித்தார்.
கர்நாடக போக்குவரத்துத் துறையின் சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட மற்ற கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர், எவோக், ஜாகுவார் எக்ஸ்ஜே-எல், ஃபெராரி, ஆடி ஆர் 8 மற்றும் போர்ஷே ஆகியவை அடங்கும்.