சென்னை
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 11 வரை இயங்க உள்ளன.
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மிகவும் குறைந்த அளவில் பயணிகளுடன் இயங்கிய மெட்ரோ ரயில் அதன்பிறகு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு பலரும் பயணம் செய்ய தொடங்கினர். கொரோனா பரவல் காரணமாக இடையில் மெட்ரோ ரயில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மெட்ரோ ரயில் கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கின. இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வார நாட்களில் அதாவது திங்கள் முதல் சனிக்கிழமை வரை மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்க உள்ளது.
நெரிசல் நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மற்ற நேரங்களில் 10 நிமிடங்கள் இடைவெளியிலும் இயங்க உள்ளன. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்க உள்ளன.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களளுக்குள் நுழைய மற்றும் பயணம் செய்ய முகக் கவசம் கட்டாயம் ஆகும். முகக் கவசம் அணியா விட்டாலோ அல்லது முகக் கவசத்தை சரியாக அணியாவிட்டாலோ உடனடியாக ரூ.200 அபராதம் விதிக்கப்பட உள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.