சென்னை: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அரசு மற்றும்அதிகாரிகள், அதை முறையாக கடைபிடிக்காத நிலையில், மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வரும் திட்டங்கிழமை முதல் மீண்டும் பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்துவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை எப்போதும்போல, இந்த முறையாக இந்த அறிவிப்பு கண்ணாமூச்சியாக இருக்குமா அல்லது கண்டிப்புடன் நடைமுறைப் படுத்துமா, தற்போதைய திமுக அரசு, பிளாஸ்டிக் தடையில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. – கண்டிப்பா? சென்னையில் 23ந்தேதி முதல் மீண்டும் பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்துகிறது சென்னை மாநகராட்சி.
கடந்த 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், தேக்கி வைப்போர், விற்பனை செய்வோர், அதை பயன்படுத்துவோர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அபராதம் விதிப்பதற்கான அரசாணை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு ரூ.2 லட்சம், தேக்கி வைப்போருக்கு ரூ.1 லட்சம, விற்பனை செய்வோருக்கு ரூ. 50,000 ஆயிரம், கடைகளின் பயன்படுத்துவோருக்கு ரூ. 25,000 மற்றும் நுகர்வோருக்கு ரூ.500 என முதல்கட்ட அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதற்கு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இருந்தாலும், தமிழக அரசு பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தியது. அதிகாரிகள் அதிரடியாக ரெய்டுகளை நடத்தினார், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டன.
தடையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்கள் விற்பனை மற்றும் உற்பத்தி செய்ததாக, 4.5 லட்சம் ரெய்டுகள்/ஆய்வுகளுக்குப் பிறகு 318 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ .1.31 கோடியை வரும் கிடைத்ததாகவும், தமிழக அரச கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 16ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சியில் மட்டும் மொத்தம் 250 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சோதனைகளை அதிகாரிகள் சில மாதங்களில் கைவிட்டனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கும், அரசுக்கும் இடையே ஏதோ நடைபெற்றுள்ளது அதனால் பிளாஸ்டிக் தடை மீதான நடவடிக்கை விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தலை தூக்கி செழிப்பாக வளர்ந்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா தொற்று பரவலும் உருவானதால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு வேக வேகமாக வளர்ந்து, தற்போது மீண்டு கடுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கும் நடைமுறைகளை நாளை மறுதினம் முதல் மாநகராட்சி அமல்படுத்த உள்ளது.
சமீபத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ரூ.25ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் முக கவசம், முகமூடிகள் மற்றும் சானிடைசர்களை வழங்கியதாக கூறியிருந்தது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி, சர்ச்சைக்குள்ளானது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்துவதைதொடங்குவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, விற்பனை தொடர்பான ரெய்டு நிறுத்தப்பட்டதாகவுத், வரும் திங்கட்கிழமை இதை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்து உள்ளார்.
கடைக்காரர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், அனைத்து வகையான பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகால் கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள் மற்றும் மாநிலத்தால் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் உள்ள பிற பொருட்களைப் பயன்படுத்தினால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
சென்னை மாநகராட்சியின் இந்த திடீர் அறிவிப்பு எப்போதும்போல வெறும் கண்ணாமூச்சியா அல்லது தீவிரமாக அமல்படுத்தப்படுமா என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிளாஸ்டிக்கை நம்பி ஏராளமான சிறு நிறுவனங்கள் செயல்பட்டு வரும், சிறுவியாபாரிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளதால், தற்போதைய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன நிலை எடுக்கப்போகிறதுஎன்பது போகப்போகத் தான் தெரியும். கடந்த அதிமுக அரசுபோல ஒப்புக்கு சப்பானியாக நடவடிக்கை எடுக்குமா அல்லது… எப்போதும்போல கண்துடைப்புக்காக நடவடிக்கை இருக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு குறித்த ஆய்வு செய்த மூத்த ஆராய்ச்சியாளர் வம்சி கபிலவாய், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள தடை போதாது, 2022 ஜூன் மாதத்திற்குள் மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும், , குடிமை அமைப்பும் மாநில அரசும் தடை செய்யப்பட்ட பொருட்கள் முதலில் சந்தைகளில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதுடன், அதுதொடர்பான ஆய்வுஅறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், 1,936 சில்லறை கடைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியதில், அங்கு தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பையைக் கண்டுபிடிக்கப்பட்டதும், இதுமட்டுமின்றி, 50% சாலையோர உணவகங்கள் மற்றும் பெரிய உணவகங்கள் இன்னும் பேக்கேஜிங்கிற்கு பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்துகின்றன என்று தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் பயன்படுத்தப்படும் உள்ளூர் பேக்கேஜிங் பொருட்களில் 63% மறுசுழற்சி செய்ய முடியாத பொருள். இது கடுமையாக சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றும் என்றும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.