டில்லி
சோனியா காந்தி நடத்திய 18 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 2024 ஆம் வருட மக்களவை தேர்தலே நமது முக்கிய இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி 18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொளி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஃபருக் அப்துல்லா, முக ஸ்டாலின், ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, சரத் யாதவ் உள்ளிட்ட 18 தலைவர்கள் கலந்ஹ்டுக் கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, “ வரும் 2024 ஆம் வருட மக்களவை தேர்தலே நமது முக்கிய இலக்காக இருக்க வேண்டும். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்த நோக்குடன் இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் முன்பு சுதந்திரப் போராட்டம் நடத்தியதை போல் செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்துக்குச் செயல்படும் ஒரு அரசை அமைக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஆனால் நாம் தொடர்ந்து ஒற்றுமையாகக் குரல் எழுப்பினால் நாம் நிச்சயம் வெற்றியை அடைய முடியும். நமக்கு தனித்தனி எண்ணங்கள் உள்ளன. ஆனால் தற்போது அவற்றை மறந்து ஒருங்கிணைந்து நாம் செயல்பட வேண்டிய நேரம் வந்துள்ளது. நாம் முதலில் நமது நாட்டின் தேவையை நிறைவேற்ற ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.