சென்னை

சென்னை மக்கள் வெளியே செல்லும் போது கொரோனா கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில் அலட்சியமாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை நகரில் கொரோனா பரவல் இன்றும் தொடர்கிறது.  தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 200 பேருக்கு மேல் இருந்து வருகிறது.   இதையொட்டி அனைவரும்  முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.   ஆயினும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொது இடங்களில் முக கவசம் அணியாத காரணத்திற்காக சென்னை மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுவினரால் 17.08.2021 அன்று ஒரே நாளில் மட்டும் 1,278 தனி நபர்களிடம் ரூ.2,55,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.”

கடந்த ஜூன் மாதம் 2021 முதல் இது வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 2,999 திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 70 இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.2,61,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஜூன் 6 முதல் இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8,117 நிறுவனங்களிடம் இருந்தும், 48,033 தனி நபர்களிடம் இருந்தும் மொத்தமாக  ரூ. 3,81,63,591 (3.81) கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் வெளியே செல்லும் தனிநபர்கள் பொது இடங்களில் செல்லும் போது முககவசம் அணிவதிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதிலும் அலட்சியமாக இருக்கின்றனர்.

ஆகவே தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூடுவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.” என எச்சரிக்கப்பட்டுள்ளது.