சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி மீண்டும் ஆலோசனைநடத்த உள்ளதாகவும், அதன்பிறகே முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒன்றரை வருடங்களாக கல்விநிலையங்கள் செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. இதனால், சிறார்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. இதற்கிடையில், தொழிற்கல்லூரிகள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியிருப்பதுடன், செப்டம்பர் 1ந்தேதி முதல், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் பலகட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று மீண்டும், கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சரும் பங்கேற்றார்.அப்போது, பள்ளிகள் திறக்கப்பட்டால், மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி மீண்டும் ஆலோசிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் பள்ளிகளை திறப்பது கறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.