சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதில் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், ‘நிதியமைச்சரின் பொருளாதாரம் எனக்கே புரியவில்லை’ என்று கூறியதுன், உங்கள் ஆட்சியிலும் இப்படித்தானே இருந்தது என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அதிமுக எம்எல்ஏ அரூர் சம்பத்குமார் பேசும்போது, “தேர்தல் வாக்குறுதியில் குடுத்தவை நிதி அறிக்கையில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “பொருளாதாரம் தெரியாத ஒருவர் எத்தனை முறை இந்த கேள்வியை கேட்பார். எத்தனை முறை விளக்கம் அளிப்பது என்று கூறியதுடன், நிதிநிலை அறிக்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
ஆனால், அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் மீண்டும் விடாமல், கடந்த ஆட்சியில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது, நீங்கள் இங்கே தானே இருந்தீர்கள்? எந்த அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், “இடைக்கால பட்ஜெட் போது வெளிநடப்பு செய்து இருந்தோம் என்று கூறினார். ஆனால், சம்பத்குமார் விடாமல், இடைக்கால பட்ஜெட்டில் கடன் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி கடன் இருப்பது தெரிந்தும் நகை, கல்வி, விவசாய கடன் தள்ளுபடியை எப்படி தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர், “நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்று கூறியதுடன், மீண்டும் மீண்டும் இதே கருத்தை பேச வேண்டாம். ஆக்கபூர்வமான கருத்துக்களை உறுப்பினர்கள் பேச வேண்டும்” என்றார்.
அதைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “அமைச்சர்கள் விளக்கம் அளிக்கும்போது சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும். அப்போது தான் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “இதே கருத்தை நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நான் 1000 முறை கேட்டிருக்கிறேன், ஆனால், நீங்கள் அதை கண்டுகொள்ளாமல், நாங்கள் கேள்வி எழுப்பி விட்டு டீ குடித்துவிட்டு வரும் வரை நீங்கள் அதையே விளக்கி கொண்டிருப்பீர்கள் என சிரித்துக்கண்ட கூற அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதையடுதுது மீண்டும் பேசிய எடப்பா பழனிச்சாமி, நிதியமைச்சர் கூறுவதுபோல, பொருளாதாரம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. நிதியமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் அவர் பொருளாதாரம் குறித்து பேசுகிறார். ஆனால் நாங்கள் மக்கள் பிரச்சனையை பேசதான் சட்டப்பேரவைக்கு வந்துள்ளோம், பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிக்க வரவில்லை. மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை பற்றி தெரிந்திருந்தால் போதும். மக்கள் பிரச்சினை குறித்து தெரியாமல் பொருளாதாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் நிதியமைச்சர் என்று காட்டமாக விமர்சித்தார்.
இதையடுத்து மீண்டும் பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், “பொருளாதாரம் குறித்து படித்த எனக்கே நிதியமைச்சர் பேசுவது முழுமையாக புரியவில்லை. சில நேரங்களில் நிதியமைச்சர் கூறுவது எனக்கே புதிது புதிதாக உள்ளது. அதனால், அதை மற்றவர்கள் புரிய வேண்டும், அவர்களுக்கு வைக்க வேண்டும் என்பதற்காக அவர் ஆர்வமாக விவரமாக எடுத்துச் சொல்கிறார்”, என்றார்.
எதிர்க்கட்சியினரை நகைச்சுவையாக கலாய்த்த அமைச்சர் துரைமுருகன், அப்படியே நிதியமைச்சரையும் கலாய்த்தது சட்டமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.