சென்னை: டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினருக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதில் அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ”பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ”பெட்ரோல் விலை மீதான மாநில அரசின் வரிக் குறைப்பால் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், சிறிய கார்களைப் பயன்படுத்துவோர் என சுமார் 2 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஆனால், டீசல் பயனாளிகளுக்கு வேறு வழிகளில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மீனவர்களுக்கு மானியம், போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம், பேருந்து ஓட்டுநர்களுக்கு வரிச் சலுகை என வெவ்வேறு வழிகளில் சில சலுகைகளை வழங்கி வருகிறோம். அதனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை. தற்போதுள்ள நிதி நிலையில் பெட்ரோல் விலையை மட்டும் குறைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.