சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட உள்ள 11 மருத்துவக்கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த மத்தியஅரசு அனுமதி வழங்கும் என நம்புவதாக என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது பேசிய, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி எனும் மகத்தான திட்டத்தைக் கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. தமிழ்நாட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2011ல் முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தபோதே 6 மருத்துவக் கல்லூரிகள் நிர்வாக ஒப்புதல், இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்பிறகுதான் ஆட்சி மாற்றம் நடந்தது. அந்த 11 மருத்துவக் கல்லூரிகளும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாகத்தான் 11 மருத்துவக் கல்லூரிகளிலும் முதலமைச்சரின் அறிவுரைப்படி நேரடி ஆய்வு செய்யப்பட்டது, இது தொடர்பாக தான் டெல்லிக்கு சென்றபோது அங்கு மத்தியஅரசின் சுகாதாரத்துறை அமைச்சரிடம் இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினோம். அதுமட்டுமல்லாமல் ஒரு மருத்துவக் கல்லூரியில் 156 மாணவர்கள் சேர்க்கை என்பதற்கு ஏற்ப 11 மருத்துவ கல்லூரிக்கு 1,650 மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினோம். அதை மத்தியஅரசு ஏற்று, இந்த ஆண்டே 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு 1650 மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.