மும்பை: வங்கி மோசடியில் சிக்கி வெளிநாட்டில் வசித்து வரும் பிரபலதொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான மும்பை விமான நிலையம் அருகே இருந்த சொகுசு பங்களா ரூ.52.50 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்த கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு, அவர் தர வேண்டிய கடன்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விஜய்மல்லையாவுக்கு சொந்தமான  2401.70 சதுர மீட்டர் சொத்து மும்பை விமான நிலையம் அருகே உள்ளது. இந்த இடத்தை கடந்த 2016ம் ஆண்டு அமலாக்கத்துறை கைப்பற்றியது. தொடர்ந்து  கடன் மீட்பு தீர்ப்பாயம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதுவரை 8 முறை விற்பனை ஏலம் விடப்பட்டு, விற்பனையாகாத நிலையில், 9வது முறை நடைபெற்ற ஏலத்தில்,  ரூ.52.25 கோடிக்கு  விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையானது மிகவும் குறைவு என்றும்,  விமான நிலையத்தின் அருகே இந்த பங்களா இருப்பதால், பங்களாவில் எந்தவித மாற்றமோ, மேலும் கட்டவோ, விமான துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பதால், அந்த பங்களாவை வாங்க யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.