எண்ணை நிறுவனங்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கிய உத்திரவாத கடனை அடைக்க வேண்டி இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீலுக்கான விலையை இப்போதைக்கு குறைக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறியிருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்தக் கூற்று விஷமத்தனமானது மட்டுமல்லாமல் உண்மைக்குப் புறம்பானது என்று காங்கிரஸ் கட்சி கூறி இருக்கிறது.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் விலை ரூ. 28.87 உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

2020 – 21 ம் நிதியாண்டில் மட்டும் மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி மூலம் 4,53,812 கோடி ரூபாய் சுரண்டி இருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் – டீலுக்கான கலால் வரியாக 22,33,868 கோடி வாரிக் குவித்திருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் விலையை 28.87 ரூபாய் அதிகரித்த நிலையில், டீசல் விலையை 28.37 ரூபாய் உயர்த்தி இருக்கிறது, இந்த விலை உயர்வின் மூலம் மட்டும் ரூ. 17.29 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டி இருக்கிறது.

எண்ணெய் நிறுவனங்களுக்கான உத்தரவாதக் கடன் ரூ. 1.3 லட்சம் கோடிக்கான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் இன்னும் உள்ள நிலையில், மோடி அரசால் இந்த நிறுவனங்களுக்கான உத்தரவாதக் கடனில் ரூ. 3500 கோடி மட்டுமே 2021 ஆண்டு ஏப்ரல் வரை  திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது.

வரி வருவாயை உயர்த்தி மக்களை சுரண்டியதோடு மட்டுமல்லாமல், கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் உள்ள நிலையில், சொற்ப தொகையை மட்டுமே திரும்பிச் செலுத்திவிட்டு, அனைத்திற்கும் இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் மீது பழி போடுவது பா.ஜ.க. அரசின் கையாலாகாத தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று ரந்தீப் சுர்ஜேவாலா பதிவிட்டிருக்கிறார்.