கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் முகைதின் யாசின் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதையடுத்து மலேசியாவின் காபந்து பிரதமராக திரு முகைதீன் யாசின் தொடருவார் என்று தேசிய அரண்மனை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிரதமராக இருந்த மகாதீர் பதவி விலக்கியதையடுத்து, புதிய பிரதமராக முகைதீன் யாசின் பிரதமராக பதவியேற்றார்.  யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால், யாசின் அரசு பெரும்பான்மை இழந்தது.

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசு பெரும்பான்மை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும். அதன்படி, மலேசியாவின் பிரதமர் முகைதீன் யாசின்,  தமது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டின் மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவிடம்  கொடுத்தார்.  அப்போது,  தமது பெரிக்கத்தான் நேசனல் கூட்டணி, நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையைத் தக்க வைத்திருப்பதாக மன்னரிடம் உறுதியளித்தார். தங்கள் கட்சி வசம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் எல்லாம் இனி மன்னரின் முடிவில் இருப்பதாகவும் அவர் க் கூறினார்.

நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 111 தேவை. திரு அன்வார் இப்ராஹிம் வழிநடத்தும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் 88 எதிர்க்கட்சி உறுப்பினர்களே உள்ளனர். தாங்கள் அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவதாகவும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தலைமைத்துவத்தை உறுதி செய்யும்  பொறுப்பு இப்போது மாமன்னரிடம் இருப்பதாகவும் பிரதமர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில், அடுத்த பிரதமர் நியமிக்கப்படும்வரை பிரதமர் கடமைகளை முகைதீன் தொடர்ந்து ஆற்றுவார் என மன்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மலேசிய நாட்டின்   மாமன்னர் அப்துல்லா அகமது ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டு மக்களின் நலன், பாதுகாப்பைக் கருதி இப்போதைக்கு பொதுத் தேர்தலை நடத்துவது சிறப்பான தேர்வு அல்ல. அதனால் முகைதீன் யாசின் காபந்து பிரதமராக ஆட்சியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கூட்டணி கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து திரு முகைதீன் யாசின் விலகக் கோரியும் டாக்டர் மகாதீர், திரு அன்வார் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்  நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டதுடன், யாசின் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

“மக்கள் கண்டனம் தெரிவிக்கும் நிலையிலும், வெட்கமின்றி பிரதமர் பதவியில் நீடிக்கும் முகைதீன், அப்பொறுப்பில் இருந்து விலக மறுத்து வருகிறார்,” என்றார் 96 வயதான டாக்டர் மகாதீர் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், யாசின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.