சென்னை
கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாயலாம் என கூறப்படுகிறது.
நடிகை மீரா மிதுன சென்னையில் வசித்து வருகிறார். இவர் மிஸ் சவுத் இந்தியா மற்றும் மிஸ் தமிழ்நாடு ஆகிய அழகிப் பட்டங்களை வென்றவர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவர் மீது மோசடி வழக்குகளும் உள்ளன.
சமீபத்தில் யு டியூபில் வெளியான ஒரு வீடியோவில் பட்டியல் இனத்தவர் குறித்தும் பட்டியலின இயக்குநர்கள், நடிகர்கள் குறித்தும் இழிவாகப் பேசி இருந்தார். இதனால் சமூக வலைத் தளங்களில் கடும் சர்ச்சை எழுந்தது. இவருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் மீரா மிதுன் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் இவர் மீது இந்தியத் தண்டனை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் என பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு அவரை விசாரணைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. மீரா மிதுன் விசாரணைக்கு வராததோடு காவல்துறையினருக்குச் சவால் விடும் வகையில் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது
கடந்த 14 ஆம் தேதி மீரா மிதுன் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள விடுதியில் கைது செய்யபட்ட்டுள்ளார். பிறகு அவர் சென்னை அழைத்து வரப்பட்டு வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டார். மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. நேற்று மாலை அவரை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். அவரை 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மீராமிதுன் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீரா மிதுனின் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட அவருக்கு உதவி புரிந்த அவரது ஆண் நண்பர் அம்பத்தூர் சாம் அபிஷேக் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மீரா மிதுன் மீது பல வழக்குகள் உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்புள்ளதாகச் சட்ட நிபுணர்கள் கூறி உள்ளனர்.