சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசின் முதன்பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதே வேளையில், தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழக சட்டமன்றம் இன்று இரு சிறப்பை பெறுகிறது.

தமிழ்நாட்டில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று முதன்முறையாக காகிதமில்லா முறையில்  தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.  இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தாடர்  செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இதனைத்தொடர்ந்து முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் ஆக.16 தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வரான பிறகு தாக்கலாகும் முதல் நிதி நிலை அறிக்கை என்பதால் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.