சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தனது டிவிட்டர் பதிவில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதத்தையும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை. பல நாட்களாக ஊடகங்களுக்குப் பிரதமர் மோடி பேட்டி அளிக்காமல் உள்ளார். இது கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் டில்லியில் பலாத்காரக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து அந்த படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். அதையொட்டி அவரது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கணக்கும் முடக்கப்பட்டது.
இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டரில்,
”ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?”
எனப் பதிந்து மத்திய அரசை விமர்சித்துள்ளார்.