சென்னை: தமிழக சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள திமுகதலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசின் முதல் பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக, காகிதமில்லா இ-பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் டேப்லட் பிசி எனப்படும் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சபையின் மேஜையின் மீது கணினி பொருத்தப்பட்டு உள்ளது.
ஆகஸ்டு 13ஆம் நாள் காலை 10 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு 2021 – 2022 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து நாளை மறுதினம் 14ந்தேதி அன்று, வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் முதன் முதலாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்கள் மீதான விவாதம் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடைபெறும். பின்னர் அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள்.
ஆகஸ்டு 23-ந்தேதி முதல் துறை வாரியான மானிய கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்வார்கள். தொடர்ந்து 23 நாட்கள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். மொத்தம் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 29 நாட்கள் சட்டசபை நடைபெற உள்ளது.
29 நாட்கள் நடைபெறும் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்- முழு விவரம்!