திரைத்துறையில் நுழைந்து 43 ஆண்டுகள் ஆனதையடுத்து நடிகை ராதிகாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.

கடந்த 1978-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு சின்னத்திரையில் கால் பதித்து, நடிப்பு, தயாரிப்பு என பலருக்கும் உதாரணமாக திகழ்கிறார்.

இந்நிலையில் அவருக்கு நடிகரும் ராதிகாவின் கணவருமான சரத்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“என்னுடைய அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள். இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ராதிகா” என பதிவிட்டுள்ளார்.