இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் தடகள வீரரும் இரண்டாவது தனிநபருமான நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகிறது.
கொரோனா காரணமாக 2021 ஜூலையில் தொடங்கிய டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.
முதல் முறையாக தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று அனைத்துப் பதக்கங்களையும் இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது, 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் பெற்று பதக்கப் பட்டியலில் 48 வது இடம் பிடித்தது.
87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார் நீரஜ் சோப்ரா, இதற்கு முன் 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கான ஒலிம்பிக் தங்கத்தை வென்ற முதல் இந்தியராவார்.
தங்கம் ஈட்டிய தங்கமனுக்கு கிடைத்திருக்கும் பரிசுப் பொருட்களின் பட்டியல் :
-
- நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா அரசு 6 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், கிளாஸ் 1 அதிகாரியாக அரசுப் பணியும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. நீரஜ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹரியானவைத் தொடர்ந்து பஞ்சாப் அரசு இவருக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்திருக்கிறது.
- மணிப்பூர் மாநிலமும் இவருக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கியிருக்கிறது.
- பதக்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நீரஜ் சோப்ராவுக்கு 1 கோடி ரூபாய் பரிசுப் பணம் அறிவித்துள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக 1 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், அவர் ஈட்டி எறிந்த தூரத்தைக் குறிக்கும் வகையில் 8758 என்று அச்சிடப்பட்ட ‘ஜெர்சி’ ஒன்றை வெளியிட்டு கௌரவப் படுத்துகிறது.
- மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா XUV 700 ரக மஹிந்திரா SUV கார் ஒன்றை பரிசாக அறிவித்திருக்கிறார்.
- இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஓராண்டுக்கு நீரஜ் சோப்ரா கட்டணமில்லாமல் எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
- ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூ’ஸ் ரூ. 2 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
இவை தவிர, நீரஜ் சோப்ராவின் துரோணாச்சாரியார் குறித்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பரபரத்துக் கொண்டிருக்க, நீரஜின் பயிற்சியாளர் காசிநாத் நாயக்கிற்கு 10 லட்ச ரூபாயை அன்புக் காணிக்கையாக வழங்கி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது கர்நாடக அரசு.