கோவை:  
கோவை அருகே கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த கோபால்சாமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக  வேலை பார்த்து  வருபவர் முத்துசாமி.  அன்னூர் அருகே உள்ள கோபிராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர் தனது சொத்து விவரம் குறித்த ஆவண சரிபார்ப்புக்காக நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அங்குக் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியிலிருந்தனர். போதிய ஆவணங்கள் இல்லை, இன்னும் கூடுதல் ஆவணங்களைக் கொண்டு வரும்படி அவரிடம் கலைச்செல்வி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கோபால்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைச்செல்வியை ஒருமையில் பேசியதாகத் தெரிகிறது. இதனை முத்துசாமி கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.   உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமியைத் தள்ளியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபால்சாமி ‘உன்னை வேலையிலிருந்து தூக்கி விட முடியும் என்றும் இந்த ஊரிலும் நீ இருக்க முடியாது  என்றும்  மிரட்டியதாகத் தெரிகிறது.  மேலும் தன்னிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்த  முத்துசாமி,  கோபால்சாமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
கிராம உதவியாளர் முத்துசாமி, ஒருவரின் காலில் விழும் காட்சிகளைச் சிலர் தங்களது கைப்பேசியில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த காணொளி வைரலாக சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன்,  கிராம உதவியாளர் முத்துசாமியை, கோபால்சாமி தன் காலில் விழ வைத்த விவகாரத்தில் கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார்.
இதையடுத்து, காவல்துறையினர் கோபால்சாமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.