ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா முனையில் இருந்து இந்தியா, சீனா நாடுகள் படைகளை விலக்கிக்கொண்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 12வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே கடந்த ஆண்டு (2020) ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் படைகளை குவித்து வந்தன. போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வீரர்களிடையே பதற்றத்தை தடுக்க இருநாட்டு அதிகாரிகளும், ராணுவ தலைவைர்களும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஜூலை மாதம் 31ந்தேதி 12வது கட்ட பேச்சுவாா்த்தை, லடாக்கில் உள்ள சுஷுல்-மோல்டோவில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியில் நடைபெற்றது. இதில், கோக்ரா முனையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இரு நாடுகளும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
பாங்காங் த்சோ (ஏரி) க்குப் பிறகு பிரிந்து செல்லும் இரண்டாவது உராய்வு பகுதி இது, கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) யின் ஒட்டுமொத்த விலகல் மற்றும் விரிவாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாகும். தற்போது ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, இரு தரப்பினரும் இந்த பகுதியில் முன்னோக்கி செல்வது நிறுத்தப்பட்டது. அதையடுத்து, ஆகஸ்ட் 04 மற்றும் 05 ஆகிய இரண்டு நாட்களில் இந்த விலகல் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இரு தரப்பு துருப்புக்களும் இப்போது அந்தந்த நிரந்தர தளங்களில் உள்ளன. சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை முழுமையாக விலக்கிக் கொண்டுள்ள நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதிகளான பாங்காங், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா முனை ஆகிய இடங்களில் இந்தியாவும், சீனாவும் படைகளைக் குவித்து இருந்தன. இதனால், இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் போக்கு நீடித்து வந்தது. தற்போது இரு நாட்டு ராணுவ மட்டத்தில் உடன்பாட்டு ஏற்பட்டதால், இரு நாடுகளும் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ந்தேதிகளில் தங்களது படைகளை விலக்கிக் கொண்டன. இரு நாட்டுப் படைகளும் தங்களது முந்தைய இடத்துக்கே சென்றுவிட்டன. ஏற்கெனவே, ஹாட்ஸ் பிரிங்ஸ் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் படைகளைத் திரும்பப் பெற்றுவிட்டன என கூறிப்பட்டுஉள்ளது.
ஆனால், பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் இருந்து இன்னும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.