சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (Standard Operating Procedure) பின்பற்றிப் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.