காந்திநகர்: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கேல்ரத்னா விருதின் பெயரிருந்து ராஜீவ்காந்தி பெயர் மாற்றப்பட்டுள்ளதை கண்டித்துள்ள குஜராத் முன்னாள் முதல்வர்  சங்கர்சிங் வகேலா. குஜராத்தில் உள்ள  நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என மாற்ற வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது இனி, மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஏராளமானோர் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, பெயரை மாற்ற உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தனது  டிவிட்டரில்,  பிரதமர் நரேந்திர மோடி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யலாமே என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள பழமை வாய்ந்த மோட்டேரா ஸ்டேடியம்,  நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக தயார்படுத்தப்பட்டு, பின்னர் நரேந்திர மோடி விளையாட்டரங்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.