சென்னை: கொரோனா 3வது அலை ஆகஸ்டு பிற்பகுதியில் பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 13பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலை விரைவில் தாக்கக்கூடும் என்றும், இதனால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,கொரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுடன் கூடிய  சிறப்பு வார்டுகளை அமைத்து தயாராக வைத்துள்ளது.

இந்த நிலையில்,கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.