டெல்லி: மத்தியஅரசு சார்பில் சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த விருதில் மாற்றம் செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விருதின் பெயரில் இருந்து ராஜீவ் காந்தியின் பெயரை நீக்கி, இனிமேல் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நவடிக்கைக்கு காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதுகளில் கேல் ரத்னா விருதுவும் ஒன்று. இந்த விருதுக்கு சிறப்பாக விளையாடு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
மத்திய அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் விளையாட்டுத்துறை வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்குழு ஒன்றை அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரைகள் அரசின் பல மட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின், குடியரசுத் தலைவரால் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையே பெற இயலும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என்று அர்த்தமாகும். இந்த விருதானது, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக, அவரை கவுரவிக்கும் வகையிலும். ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த விருதின் பெயருடன் இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரை நீக்கி, அதற்கு பதிலாக தயான்சந்த் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இனிமேல் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருது இனி, மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதவிட்டுள்ள டிவிட்டில், “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் விருது என மாற்ற இந்தியா முழுக்க இருந்து ஏராளமான கோரிக்கைகள் எனக்கு வந்தன. பொதுமக்களின் கருத்தை மதிக்கும் வகையில், கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும்” என தெரிவித்துஉள்ளார்.
இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தயான் சந்த், 1926 முதல் 1949 வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். 185 ஆட்டங்களில் 570 கோல்கள் அடித்தார். இவர் பங்கேற்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ராஜீவ்காந்தி பெயரை விருதில் இருந்து நீக்கிய பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு, காங்கிரசாரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.