சென்னை

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேட்டுக்  கொண்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் ஆவார்.  இவர் கங்கை கொண்ட சோழன் என  பெயர் பெற்றவர் ஆவார்.  இவர் அமைத்த பெரிய கோவில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது.   இவர் ஆடி மாதம் திருவாதிரை அன்று  பிறந்தவர் ஆவார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது, கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல.

தன் ஆளுமைத் திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு, மரக்கலங்கள் பல கட்டி, கடலை கடந்து, தன் வீரத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் பேரரசன் ராஜேந்திர சோழன்.அவர் பிறந்த ஆடி திருவாதிரை நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாட, அரசு வழிவகை செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.